Header Ads

வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு (1730–1796)

 வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு (1730–1796)

இராமநாதபுரத்தின் அரசர் செல்லமுத்து சேதுபதிக்கு 1730 ஆம் ஆண்டு அரசக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக வேலுநாச்சியார் பிறந்தார். மன்னருக்கு ஆண் வாரிசு இல்லை. அரசக் குடும்பத்தில் வளர்ந்த அவர், சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளிலும், போர்க் கருவிகளைக் கையாளுவதிலும் சிறப்புப் பயிற்சி பெற்றார். மேலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது போன்ற மொழிகளில் வல்லமை பெற்றிருந்ததோடு, குதிரையேற்றம் மற்றும் வில்வித்தையிலும் திறமையானவராக விளங்கினார்.

தனது 16-வது வயதில் வேலுநாச்சியார், சிவகங்கை மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். இவர்களுக்கு வெள்ளச்சி நாச்சியார் என்ற பெண் குழந்தை பிறந்தது. 1772 ஆம் ஆண்டு ஆற்காடு நவாபும், லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர் தலைமையிலான கம்பெனி படைகளும் இணைந்து காளையார்கோவில் அரண்மனையைத் தாக்கின. இதனால் ஏற்பட்ட போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். தனது மகளுடன் தப்பிச் சென்ற வேலுநாச்சியார், கோபால நாயக்கரின் பாதுகாப்பில் திண்டுக்கல் அருகிலுள்ள விருப்பாட்சியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.

மறைந்து வாழ்ந்த காலத்தில், வேலுநாச்சியார் ஒரு படைப்பிரிவை உருவாக்கியதோடு, கோபால நாயக்கர் மட்டுமல்லாமல் ஹைதர் அலியுடனும் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். வேலுநாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு, தளவாய் (இராணுவத் தலைவர்) தாண்டவராயன் எழுதிய கடிதத்தில், ஆங்கிலேயர்களைத் தோற்கடிக்கும் பொருட்டு 5,000 காலாட்படைகளையும் 5,000 குதிரைப்படைகளையும் அனுப்புமாறு கோரப்பட்டது. வேலுநாச்சியார் உருது மொழியில் தனக்கு கிழக்கிந்திய கம்பெனியுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகளை கடிதத்தில் விவரித்திருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் தாம் உறுதியாக இருப்பதையும் தெளிவுபடுத்தினார்.

அவரது மன உறுதியைக் கண்டு வியந்த ஹைதர் அலி, தனது திண்டுக்கல் கோட்டை படைத்தலைவரான சையதிடம், வேலுநாச்சியாருக்கு தேவையான இராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார். வேலுநாச்சியார் பிரிட்டிஷாரின் ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடங்களை அறிய உளவாளிகளை நியமித்தார். கோபால நாயக்கர் மற்றும் ஹைதர் அலியின் இராணுவ உதவியுடன் அவர் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றினார். மருது சகோதரர்களின் உதவியால் அவர் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமை அவருக்கே உரியது.

கோபால நாயக்கர்

விருப்பாட்சியின் பாளையக்காரரான கோபால நாயக்கர், திண்டுக்கல் கூட்டமைப்பின் (Dindigul League) தலைவராக விளங்கினார். இக்கூட்டமைப்பில் மணப்பாறையின் லட்சுமி நாயக்கரும், தேவதானப்பட்டியின் பூஜை நாயக்கரும் இடம்பெற்றிருந்தனர். தனது நட்பை வெளிப்படுத்தும் விதமாக திப்பு சுல்தான் அனுப்பிய நல்லுறவுக் குழுவால் கோபால நாயக்கர் ஈர்க்கப்பட்டார். கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு பிரிட்டிஷாரை எதிர்த்த அவர், பின்னாளில் கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரையுடன் இணைந்தார். உள்ளூர் விவசாயிகளின் ஆதரவுடன் ஆனைமலையில் கடும் போர் புரிந்தார். இருப்பினும், 1801 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளால் தோற்கடிக்கப்பட்டார்.

குயிலி

வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாக விளங்கிய குயிலி, "உடையாள் படை" எனப்படும் பெண்கள் படைப்பிரிவை வழிநடத்தினார். "உடையாள்" என்பது குயிலி பற்றிய தகவல்களை உளவாக வழங்க மறுத்ததற்காக கொல்லப்பட்ட ஒரு மேய்ப்புப் பெண்ணின் பெயராகும். 1780 ஆம் ஆண்டு குயிலி தன்னைத்தானே தீக்குளித்துக் கொண்டு, பிரிட்டிஷாரின் ஆயுதக் கிடங்கிற்குள் சென்று அங்கிருந்த அனைத்து தளவாடங்களையும் அழித்தார். இதன் மூலம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தற்கொடைப் போராளியாக குயிலி போற்றப்படுகிறார்.

No comments

Powered by Blogger.