சிறப்பு தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி இன்று முதல் நடக்கிறது.
சிறப்பு தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி இன்று முதல் நடக்கிறது .
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி இன்று முதல் தொடங்குகிறது.
ஆசிரியர்களின் தனித் தயாரிப்பும் அவசியம்
ஆசிரியர்கள் பயிற்சிக்கான நேரலை அமர்வுகளின் போது தனிப்பட்ட குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் சுயத் தயாரிப்பைத் தொடர வேண்டும். இப்பயிற்சியில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் தலைப்புகள் ஆசிரியர்களின் தேர்வுத் தயாரிப்பிற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் இந்தப் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மட்டுமே வரும் என்று கருதக்கூடாது.
ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு தனித் தயாரிப்பையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கான பதிவிற்குப் பிறகு பகிரப்படும் தினசரி கால அட்டவணையின்படி, பங்கேற்பாளர்கள் சரியான நேரத்தில் வகுப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், ஜூன் 8: நாடு முழுவதும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வினை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்று (8ஆம் தேதி) முதல் வரும் 30ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் இதற்கான கூகுள் படிவம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், ஆசிரியர் தகுதித்தேர்வு வலுவூட்டல் பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இப்பயிற்சியானது இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்–1 மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்–2 தேர்வுகளை எதிர்கொள்ள தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலுவூட்டல் பயிற்சி முழுவதும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்படும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க முடியும்.
ஆசிரியர்கள் தங்கள் பெயர், வயது, பணி அனுபவம், பதவி, EMIS எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி, கல்வி ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற துல்லியமான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
வெற்றிகரமாக மின்னஞ்சல் முகவரியுடன் முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே பயிற்சி வகுப்பில் இணைவதற்கான இணைப்பு மற்றும் கால அட்டவணை, மின்னஞ்சல் மற்றும் டெலிகிராம் குழுவில் சேர்வதற்கான இணைப்பு பகிரப்படும்.
இப்பயிற்சி அந்தந்த பாடவல்லுநர்களால் கையாளப்படும். பாடவல்லுநர்களால் எந்தவிதமான குறிப்புகளோ அல்லது கூடுதல் ஆதாரங்களோ பகிரப்பட மாட்டாது. ஆசிரியர்கள் தடையற்ற இணைய வசதி, செயல்பாட்டில் உள்ள ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மற்றும் இடையூறு இல்லாத அமைதியான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பாடவாரியாக வகுப்புகள் நடைபெறும். தேர்வில் வெற்றி பெறுவது ஒவ்வொரு ஆசிரியரின் தொடர்ச்சியான சுயத் தயாரிப்பு, பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பொறுத்தே அமையும். ஆசிரியர்கள் தங்களது வழக்கமான பள்ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments