தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நீதிக்கட்சி வரலாறு
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) வரலாறு

1916 நவம்பர் 20 அன்று டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உள்ளிட்ட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் இணைந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்கினர். இதே காலகட்டத்தில், 1916 டிசம்பரில் சென்னை விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பிராமணர் அல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை பிராமணர் அல்லாத சமூகங்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்தியது.
இவ்வமைப்பு தனது கொள்கைகளைப் பரப்புவதற்காக தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் Justice, தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய செய்தித்தாள்களை வெளியிட்டது.
மாண்டேகு–செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் மாகாணங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 1920ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது. ஏ. சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார்.
நீதிக்கட்சி 1920–1923 மற்றும் 1923–1926 ஆகிய காலகட்டங்களில் ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்த சூழ்நிலையில், 1937ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் வரை நீதிக்கட்சி ஆட்சியில் நீடித்தது. 1937 தேர்தலில் முதன்முறையாகப் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சியைத் தோற்கடித்தது.
திட்டங்களும் செயல்பாடுகளும்
நீதிக்கட்சி நாட்டில் பிராமணர் அல்லாத மக்களின் அரசியல் பிரதிநிதியாக விளங்கியது. அதன் ஆட்சி, பெரும்பான்மையான மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, அரசியல் தளத்தில் அவர்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கியது.
சாதி மறுப்புத் திருமணங்களைத் தடுக்கும் சட்டச் சிக்கல்கள் நீக்கப்பட்டன. மேலும், பொதுக் கிணறுகள் மற்றும் நீர்நிலைகளை ஒடுக்கப்பட்ட பிரிவினர் பயன்படுத்துவதைத் தடுத்திருந்த தடைகளும் அகற்றப்பட்டன. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை பொதுப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இம்மாணவர்களுக்காக 1923ஆம் ஆண்டு தங்கும் விடுதிகளும் உருவாக்கப்பட்டன.
நீதிக்கட்சியின் கீழ் செயல்பட்ட சட்டமன்றமே 1921ஆம் ஆண்டு பெண்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்பதை அங்கீகரித்தது. இதன் விளைவாக, 1926ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.
பல்வேறு சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை ஏற்படுத்துவதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது. சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கில், அரசுப் பணிகளில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதற்காக 1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் வகுப்புவாரி அரசாணைகள் வெளியிடப்பட்டன.
அனைத்து சமூகத்தினரும் நிர்வாக அதிகாரங்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக 1924ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. இதனைப் பின்பற்றி, பிரிட்டிஷ் இந்திய அரசு 1929ஆம் ஆண்டு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை (Public Service Commission) உருவாக்கியது.
இவற்றுடன், சமய நிறுவனங்களைச் சீர்திருத்துவதிலும் நீதிக்கட்சி முக்கிய பங்கு வகித்தது. 1926ஆம் ஆண்டு இந்துச் சமய அறநிலையச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம், சாதி வேறுபாடின்றி எந்த நபரும் கோவில் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராக இருந்து, கோவில் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை பெற்றனர்.
No comments