Header Ads

தமிழ்நாட்டில் அச்சுத் தொழில்நுட்பத்தின் வருகை

 தமிழ்நாட்டில் அச்சுத் தொழில்நுட்பத்தின் வருகை

ஐரோப்பிய மொழிகளைத் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழாகும். மிக முன்பாக 1578ஆம் ஆண்டு “தம்பிரான் வணக்கம்” எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது. 1709ஆம் ஆண்டு முழுமையான அச்சகம் சீகன்பால்க் என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது. தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் விளைவாக, இக்காலப் பகுதியில் மிகவும் பழமையான செவ்வியல் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதில் தமிழ் அறிஞர்களிடையே புத்தெழுச்சி ஏற்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை. தாமோதரனார் (1832–1901), உ.வே. சாமிநாதர் (1855–1942) போன்றோர் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டனர். சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப்பட்டிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர், செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889), சிலப்பதிகாரம் (1892), புறநானூறு (1894), புறப்பொருள் வெண்பா மாலை (1895), மணிமேகலை (1898), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904) ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாற்று மரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நவீனத் தமிழர்கள் தங்களது சமூக, பண்பாட்டு அடையாளங்களைப் பண்டைய தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாகக் கண்டறிந்தனர். அவை மொத்தத்தில் சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1816ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை நிறுவிய எப். டபிள்யூ. எல்லிஸ் (1777–1819), தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை; அவை இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்துடன் தொடர்பில்லாதவை என்ற கோட்பாட்டை உருவாக்கினார். ராபர்ட் கால்டுவெல் (1814–1891), “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்” என்ற தலைப்பிலான நூலில் இக்கோட்பாட்டை 1856ஆம் ஆண்டு விரிவுபடுத்தினார். திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒற்றுமை இருப்பதையும், அத்தகைய ஒற்றுமை சமஸ்கிருதத்துடன் இல்லையென்பதையும் நிறுவினார். மேலும், தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

இக்காலகட்டத்தைச் சேர்ந்த அறிவார்ந்த தமிழர்கள், தமிழ் / திராவிடம் / சமத்துவம் மற்றும் சமஸ்கிருதம் / ஆரியம் / பிராமணியம் ஆகிய இரண்டிற்கும் இடையேயுள்ள அடிப்படை வேறுபாடுகளை அடையாளம் கண்டனர். அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழி என்றும், தமிழர்கள் பிராமணர்கள் அல்லர் என்றும், அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளும் பாலின வேறுபாடுகளும் இல்லாமல் சமத்துவம் நிலவியது என்றும் வாதிட்டனர். தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பெரும் பங்களிப்பைச் செய்தது. இச்சிந்தனைகள் பெ. சுந்தரனார் (1855–1897) எழுதிய “மனோன்மணீயம்” எனும் நாடக நூலில் இடம்பெற்றுள்ள தமிழ்மொழி வாழ்த்துப் பாடலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் (1823–1874), நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். ஆபிரகாம் பண்டிதர் (1859–1919), தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களையும் வெளியிட்டார்.

சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி. கல்யாணசுந்தரம் (1883–1953), பரிதிமாற் கலைஞர் (1870–1903), மறைமலையடிகள் (1876–1950), சுப்பிரமணிய பாரதி (1882–1921), ச. வையாபுரி (1891–1956), கவிஞர் பாரதிதாசன் (1891–1964) ஆகியோர் தங்களுக்கே உரிய வழிகளில், தங்களது எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

இதே சமயத்தில், பௌத்தத்திற்கு புத்துயிர் அளித்த தொடக்ககால முன்னோடியான ம. சிங்காரவேலர் (1860–1946), காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார். பண்டிதர் அயோத்திதாசர் (1845–1914) மற்றும் பெரியார் ஈ.வே. ராமசாமி (1879–1973) ஆகியோர் சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பகுத்தறிவுச் சிந்தனையை உயர்த்திப் பிடித்தனர்.

No comments

Powered by Blogger.