Header Ads

மரங்கொத்திப் பறவையும் சிங்கமும் ஜாதகக் கதை

 மரங்கொத்திப் பறவையும் சிங்கமும் ஜாதகக் கதை

முன்னொரு காலத்தில் ஒரு மரங்கொத்திப் பறவையும் ஒரு சிங்கமும் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் சிங்கம் ஒரு காட்டு எருமையை வேட்டையாடி உண்ணத் தொடங்கியது அவ்வாறு உண்ணும்போது ஒரு பெரிய எலும்பு சிங்கத்தின் தொண்டையில் சிக்கிக்கொண்டது சிங்கத்தால் அந்த எலும்பை எடுக்க முடியவில்லை. சிங்கத்திற்குக் கடுமையாக வலித்தது. இரக்க மனம் கொண்ட மரங்கொத்திப்பறவை சிங்கத்திற்கு எலும்பை எடுக்க உதவி செய்வதாகக் கூறியது. இருந்தபோதிலும் எலும்பை எடுக்கும்போது தன்னை சிங்கம் விழுங்கிவிட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் மட்டுமே எலும்பை எடுக்க முடியும் என்று மரங்கொத்தி கூறியது. சிங்கமும் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டு மரங்கொத்தியின் முன்னால் தனது வாயைத் திறந்தது. சிங்கத்தின் வாய்க்குள் நுழைந்த மரங்கொத்தி எளிதாக அந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது. சிங்கமும் தனது வாக்குறுதியைக் காப்பாற்றியது மரங்கொத்திப் பறவை பறந்து சென்றது. பிறிதொருநாள் அதே சிங்கம் மற்றொரு காட்டெருமையைக் கொன்றது. சிங்கத்தோடு சேர்ந்து உண்ணலாம் என்று நினைப்பில் மரங்கொத்தி தனக்கும் சிறிது மாமிசம் தருமாறு சிங்கத்தைக் கேட்டது மரங்கொத்தி ஏமாற்றம் அடையும் வகையில் சிங்கம் தனது உணவில் மரங்கொத்திக்குப் பங்குதர அப்பட்டமாக மறுத்ததோடு, எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னிடம் மறுபடியும் சகாயம் செய்யும்படி கேட்பாய்? உனக்கு நான் ஏற்கனவே நிறையச் செய்தாயிற்று என்றது. சிங்கம் எதைப்பற்றிப் பேசுகின்றது என்று மரங்கொத்திக்குப் புரியவில்லை. பின்னர் சிங்கம் தெளிவு படுத்தியது. "நீ எனது தொண்டையிலிருந்து எலும்பை எடுக்கிறபோது, உன்னை விழுங்காமல் விட்டுவிட்டேன். அதற்காக நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதே போய்விடு" என்றது. நன்றியில்லாத இந்த ஜென்மத்திற்கு உதவி செய்தது என்னுடைய தவறு" என மரங்கொத்தி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. மேலும் இதைப்போலத் தகுதியற்ற ஒருவரின்மேல் கோபம் கொள்வதில் அல்லது வருத்தம் அடைவதில் எப்பயனுமில்லை என்று கூறிப்பறந்தது.

No comments

Powered by Blogger.